என்னுடைய பிள்ளை பருவத்தில் அம்மா சொல்லிக் கேட்ட கதைகளுள் ஒன்றில்
ஒரு சிறுவன் ஒரு ஆற்றை காண்பித்து தன் அப்பாவிடம் கேட்பான், “அப்பா இந்த ஆறு எங்க
போகுது?” எரிச்சலடைந்த அப்பா சொல்வார், “உங்க அம்மா அடுப்பங்கரைக்கு.” அடுப்பங்கரை
என்பது நாம் அன்றாடம் சந்திக்கும் ஒரு இடம். தினசரி சந்திப்பதாலேயே சுவாரஸ்யம்
இழந்த இடம். அதை நிர்வகிக்கும் பெண் வெளிவுலகத்திற்கு அதன் அறிவற்றவளாகவும்,
சுவாரஸ்யமற்றவளாகவும் தான் அறியப்படுகிறாள். அடுப்பங்கரைகள் இல்லையென்றால் ஜீவிதம்
இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் பெண்களைக் காட்டிலிலும் ஆண்களே
முக்கியமானவர்களாக, திறமைசாலிகளாக நடத்தப்படுகிறார்கள். குடும்பம் என்பது ஆண்
ஈட்டும் பொருளை சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான குடும்ப அமைப்பானது
பொருளால் மட்டுமல்லாது அடுப்பங்கரை பெண்களின் பொறுமையினாலும் மன உறுதியினாலும்
உயிர்ப்புடன் இருக்கின்றன என்பதை சு. தமிழ்ச்செல்வியின் மாணிக்கம் விளக்கி
கூருகிறது.
கதையின் மையப்பாத்திரம் மாணிக்கம். ஹோமியோபதி வைத்தியம் பயின்ற மருத்துவர்.
பண்பாளரான மாணிக்கம் காதல் தோல்வியினால் குடி, சீட்டாட்டம் என்று வழிதவறிp போக அவரை கட்டுக்குள்
கொண்டுவர செல்லாயியை மணமுடித்து வைக்கிறார்கள். அவரது கோபதாபங்களுக்கு
வடிகாலாய் செல்லாயி உருபெறுகிறாள். மாமியார்
ஒரு புறம், மாணிக்கம் மறுபுறமென செல்லாயி அல்லல் படுகிறாள்.
இயல்பிலேயே தன்னிச்சையானவரான மாணிக்கம் தாய் அவமானபடுத்த வீட்டை விட்டு
வெளியேறுகிறார். இப்படி பலமுறை தான் சம்பாதித்தவற்றையெல்லாம்
இழக்கிறார். சம்பாதிப்பதும் இழப்பதும் அவராகிப்போக, பிள்ளைகள் வளர்ந்து மணமுடித்து வRருமையில் உழல, தன் இளவயது
தவறுகளை உணருகிறார் மாணிக்கம். தன்
மகனுக்கு தொழில் தொடங்க திட்டமிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
மாணிக்கம்
தன்முரண்களும் சிக்கல்களும் நிரைந்த கதாபாத்திரம். ஒருபுறம் மாடனுக்கு ஆட்டுக்கிடாவை வெட்டிக் கொல்ல மனமில்லாத கருணையும், மருபுறம் மனைவியை வீட்டில் பூட்டி வீட்டை எறிப்பதும்,
பிறகு அவளை தெருவில் போட்டு உதைப்பதும், கிணற்றில்
குதித்தவளை கிணற்றுக்குள் சென்று அடிப்பது என மிக மூர்கமான மனிதராகவும் இருக்கிறார்.
காதலியிடம் அன்பு பாராட்டுபவர் மனைவியின் துயரங்களை கண்டும் காணாமல்
போகிறார். மனைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு காதலியை இரண்டாம்
மணம் புரியாமல் இருப்பவர், மனைவி குழந்தைகளின் நலன் கருதாமல்
அவர்களை விட்டுசெல்கிறார். மாணிக்கம் கடும் உழைப்பாளி,
புத்திசாலி. அதேசமயம் சிறு பிரச்சனைகளைக்கூட சமாளிக்கும்
பொருமையற்றவர். இவருக்கு நேரெதிர் குணங்களுடன் நிருத்தப்பட்டிருக்கிறார்
செல்லாயி.
நாவலின்
தலைப்பு மாணிக்கம் என்று இருந்தாலும்,
கதையில் முக்கிய பங்கு வகிப்பவள் செல்லாயி. மாணிக்கம்
தன்னுடன் பிடிப்பற்று வாழ்ந்த காலத்திலும், அவளை விட்டுச் சென்ற
நேரத்திலும், பெரிதாய் பொருளிட்டிய நிகழ்வுகளாயினும்,
மாணிக்கத்தின் மீது பாய்ச்சப்படும் ஒளி செல்லாயியை விரித்து காட்டுகிறது.
பதற்றங்கள் நிறைந்த இளம் மணப்பெண்ணாக, ஆதரவற்ற அடிமை மருமகளாக, கணவன் இழுத்த
இழுப்புக்கெல்லாம் செல்வதை தவிற வேறு வழியற்றவளாக, வசதி வாய்ப்புகள் வாய்க்கப்பெற்றபின் சிங்கார குடும்பத்தலைவியாக, தாயாக அனைத்து சூழ்நிலைகளிலும் தெளிவான மனநிலையும்
மனவுறுதியும் உடைய பாத்திரமாக படைக்கப் பட்டிருக்கிறார். புத்தகத்தின்
தலைப்பை சிலேடையாக பார்த்தால் கதையின் கதாநாயகி செல்லாயிதான்.
நகர்புற
வாழ்வும் மெகா சீரியல்களும் பெருகிவிட்ட இந்த காலத்தில் கணவனால் மாமியாரால் ஒரு பெண்
பெருங்கொடுமைக்கு ஆளாவது நமக்கு அலுப்பூட்டும் கதைக்களம். இருப்பினும்
இக்கதைகளுக்கு பின் ஒளிந்திருக்கும் கருத்தாக்கங்கள் கவனிக்கப்படவேண்டியவை.
குடும்பம் என்ற அமைப்பு எச்சூழலிலும் பிளவு பட கூடாது. குடும்பத்தலைவன் (patriarch) மானம் கெளரவம் காப்பாற்றப்பட வேண்டும். இப்பொருப்பும் கடமையும்
பெண்களுக்கு மட்டுமே உரியது. இதற்காக அவள் எதையும் இழக்க தயாராய்
இருக்க வேண்டும் – கற்ப்பை தவிற; எவ்வளவு
கஸ்டமானாலும் அனுபவிக்க வேண்டும். பெண் தனித்து வாழ்வது பாதுகாப்பற்றது,
அவமானத்திற்குரியது. இதன் பின்னனியில் நமது மெகாசீரியல்
கதாநாயகிகள் குடும்பத்தை பராமரிப்பவர்களாக, சுயநலமற்றவர்களாக,
மிக முக்கியமாக கணவனை எங்கும் விட்டுக்கொடுக்காதவர்களாக,
அவனது தீயகுணங்களை திருத்தி நல்வழி படுத்துபவர்களாக உலா வருகின்றனர்.
இதன் மூலம் இவர்கள் பார்வையாளர்களின் நன்மதிப்பையும் பெருகின்றனர்.
செல்லாயியை இந்த கட்டுகளுக்குள் வைத்துதான் உருவாக்கியிருக்கிறார் தமிழ்ச்செல்வி.
கதை அமைந்திருக்கும்
காலமான 60-70 பதுகளில் பெண்கள் கல்வி பெற தொடங்கியிருந்தாலும் அவர்களை பற்றி தொண்றுதொட்டு
நிலவி வந்த கருத்தாக்கங்கள் பெரிய அளவில் மாற்றம் அடைந்திருக்கவில்லை. குறிப்பாக கிராமப்புறங்களில் எட்டிக்கூட பார்க்கவில்லை(இப்போது மாறியுள்ளதா என்பது விவாதத்திற்குறியது). செல்லாயி
கடும் உழைப்பாளியாகவும், புத்திசாலிகயாகவும், அதே சமயம் எவ்வித உரிமையும் அற்றவளாக இருக்கிறார். குடும்பம்,
அதன் ஒற்றுமை, மானம், இவற்றை
கணக்கில் கொண்டு மாமியார் தங்கத்தாச்சியின் கொடுமைகளை பொருத்துக்கொள்கிறார்.
மாணிக்கத்தின் மானம் காக்க தன்னிடம் இருக்கும் நகையை விற்று குழந்தை
வாணிக்கு புதுத்துணி நகை வாங்கிவர செய்கிறார். குழந்தை பெற்று
45 நாட்களே ஆனபோதும், குடும்பத்தை நிலைநிருத்தும்
முனைப்பில் மாணிக்கத்துடன் செல்கிறார். இப்படி சமூகம் வகுத்துள்ள
பெண்ணிலக்கண மரபின் படி செல்லாயி செயல்படுகிறார்.
மாணிக்கம், தங்கதாச்சி, சின்னசாமி, கோவிந்து, சுக்குரு
ஆகியோரும்கூட பொதுபுத்தியில் தங்கிவிட்ட உறவுமுறைகளின் வறையரைகளுக்குள் செயல்படுகின்றனர்.
ஒரு பெண்ணுக்கு அவளது பிறந்த வீட்டார் ஆதரவாக நடப்பது, புகுந்த வீட்டார் அன்னியமாய் நடத்துவது என நம்மிடையே நிருவப்பட்ட பிம்பங்களாகவே
இருக்கின்றனர். இதனாலேயே கதை எதார்த்தமாய்
உள்ளது. செல்லாயி –இன் கதை அவலங்கள் நிரைந்ததாக
இருந்தாலும், இன்றைய மெகாசீரியல்கள் போல் மெலோடிரமாடிக் ஆக எரிச்சலூட்டவில்லை.
கதை ஒரு
ஆம்நிஸியண்ட் நாரடொர் ஆல்
சொல்லப்டுகிறது. சில வேளைகளில் அவர் கதை சொல்வதை விடுத்து வாசிப்பாளனின் சந்தேகங்கள் அறிந்து தீர்த்து வைக்கிறார். கதையின் ஓட்டத்திற்கு பாதகம் இல்லாமல் இது செய்யப்படுகிறது.
நாவலாசிரியர்
தமிழ்ச்செல்விக்கு
அவரது கதை நிகழுமிடத்தின் மீதும், அங்கு வாழும் மக்களின் சடங்குகளின் மீதும் மிகுந்த பற்று இருக்க வேண்டும். இந்த பற்றுதல்தான் அவரை ஊர் திருவிழா, குறிகேட்டல் போன்ற சடங்குகளை விவரிக்க செய்கிறது.
நாவல்
எளிமையான
நடையில்
வட்டார
வழக்கு
இழையோட
எழுதப்பட்டுள்ளது. குறிப்பிட்ட ஊர்கள் அவர்கள் செய்யும் தொழில் பற்றிய நுண்ணிய பரிச்சியம் நாவலில் வெளிப்படுகிறது.
அழகு
என்பது
குறைகளற்றதாய்
இருக்க
தேவையில்லை. கவிதை பொங்கும் மொழி நடையோ அதீத கற்பனையோ இதில் இல்லை. இருப்பினும், ஒரு பெண்ணின்-மக்களின் வாழ்வியல் போராட்டத்தை காலத்திற்குரிய எதார்த்தத்துடனும் கன்னியத்துடனும் காட்டுகிறது.
B. பூவிளங்கோதை