Sunday 15 November 2020

கொரோனா காலத்து முன்னோட்டம்: ரயில்கள் 3

 நல்ல நட்பு பிரிவை கண்டுகொள்வதில்லை. ஆண்டுகள் பல கடந்து இருந்தாலும் அது ஒரு நீரோடை போல தான் பழகிய பாதையில் பயணிக்க தொடங்கிவிடுகிறது. ரயிலுக்கும் எனக்குமான உறவு கூட அப்படியானது தான் என்பதை உணர இந்த இரு நூற்று சொச்ச நாட்கள் தேவைப்பட்டது. 



நான் கடைசியாக ரயிலில் பயணித்தது மார்ச் 20ஆம் தேதி. அதன்பிறகு நவம்பர் 11ஆம் தேதியன்று ரயிலில் ஏற முடிந்தது. இந்த இடைப்பட்ட இருநூற்றி முப்பத்தி சொச்ச நாட்களில் அவ்வப்போது கல்லூரிக்கு சென்று வந்தது எல்லாம் தனிக்கதை. இருப்பினும் ரயில் தரும் பாதுகாப்பை வேறு எந்த வாகனமும் தந்துவிட முடியாது.

முந்தினம் ஒரு மாத பயண சீட்டு வாங்கிய பொழுதே மூளை சொன்னது, "எவ்வளவு நாட்களுக்கு பிறகு ரயிலில் பயணிக்க போகிறாய்!" மறுநாள் நடைமேடைக்கு சென்றபோது பரிச்சயமில்லாத சுத்தமும் அசுத்தமும் வரவேற்றது. பயணிகள் இல்லாத நடைமேடை குப்பைகள் இல்லாமல் சுத்தமாகவும் அதே காரணத்தினால் அமரும் இருக்கைகள் பறவைகளின் எச்சத்தில் நிறைந்திருந்தது. 

வழமையாக நடைமேடையில் உறங்கும் வீடற்றவர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியவில்லை. பயணச்சீட்டு பரிசோதகர் பார்வையில் படவில்லை. "சே, இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!" என்று ஒரு மனம் சபல பட்டதும் மற்றொரு மனம் அரக்கோணத்தில் இறங்கும்போது மாட்டிக் கொள்ளக்கூடும்  என்று எச்சரித்தது. அதிர்ஷ்டவசமாக எனது இருக்கையை யாரோ காலையில் சுத்தம் செய்தது போல பளிச்சென்று இருக்க சந்தோஷமாய் போய் அதில் அமர்ந்து கொண்டேன்.

என்னைத்தவிர வேறு ஒரு பெண்ணும் நடைமேடையில் நின்றிருந்தார். சீருடை அணிந்து இருந்ததால் ஏதோ பள்ளி சிறுமியாய் இருக்கும் என்று முதலில் தோன்றியது. அடுத்த கணமே அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று புரிந்துவிட்டது. அவர் ஏதோ தனியார் நிறுவனத்தில் வேலையில் இருக்க வேண்டும். யோசித்துக்கொண்டே செல்பேசியில் கவனத்தை செலுத்தினேன்.

தோழி ஒருவர் அழைத்து அவர்கள் வரும் மின் வண்டி ஆவடியை நெருங்கி விட்டதாக சொன்னார். ஆவடி என்றால் என் நிறுத்தம் வர குறைந்தது 15 நிமிடங்கள் பிடிக்கும். நேரம் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே நடைமேடைக்கு ஒரு வண்டி வந்து சேர்ந்தது. நாங்கள் வழக்கமாக பயணிக்கும் கூண்டு வண்டி. திருப்பதி வரை செல்லும் அதை அரக்கோணம் மட்டும் சுருக்கி இருந்தார்கள். எங்கள் குழு அதில் இல்லாததால் நான் அதில் ஏறவில்லை. ரயிலை உற்று நோக்கியபோது அனைத்து பெட்டியிலும் மக்கள் வெகுவாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. பல பழகிய முகங்கள் இருப்பதும் தெரிந்தது. அதில் ஒரு பெண்மணி என்னை அடையாளம் கண்டுகொண்டார். ஆனால் பாவம் நான் யார் என்பது அவருக்கு நினைவில் வரவில்லை. 

அடுத்த பத்து நிமிடங்களில் மற்றுமொரு ரயில் வர எனது வண்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் எழுந்து நின்று பார்த்த போது அது திருவள்ளூர் ரயில் என்பது தெரிந்தது. பொது முடக்கத்திற்கு முன்பு இருந்த அதே இரயில்கள். இருப்பினும் எல்லா ரயில்களும் இயங்கத் தொடங்கிவிட்டது என்று சொல்ல முடியாது. காலையிலும் மாலையிலும் முன்புபோல ரயில்கள் விட்டிருந்தார்கள். இடைப்பட்ட நேரத்தில் ரயில்கள் சொற்பமாகவோ அல்லது முற்றிலும் இல்லாமலோ இருந்தது. 

5 நிமிடம் கழித்து ஒருவழியாக எனது மின் வண்டி வந்து சேர்ந்தது. 12 பெட்டிகள் கொண்ட மின் வண்டி. அப்படியானால் நான் நிற்கும் இடத்தில் மகளிர் பெட்டி கிடையாது.  இன்னும் பின்னால் செல்ல வேண்டும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு நடந்து சென்று மகளிர் பெட்டிக்கு ஒரு பெட்டி முன்னாள் ஏறிக்கொண்டேன். உள்ளே நுழைந்ததுமே மெல்லிய மருந்து வாடை வந்தது. "வண்டியை சுத்திகரிப்பு செய்து இருக்க வேண்டும். நல்லது." 

பெட்டியில் இங்கொன்றும் அங்கொன்றுமாக ஆட்கள் அமர்ந்திருந்தார்கள். ஆளில்லாத ஒரு ஜன்னலின் அருகே நான் அமர்ந்துகொண்டேன். நவம்பர் மாதம் என்பதால் பழம் பூவின் வரத்து கொஞ்சம் கம்மியாகத்தான் இருக்கும். இருந்தாலும் சமோசா காரரோ அல்லது வேர்க்கடலையை விற்பனையாளரோ இந்நேரம் வந்திருப்பார்கள். ஆனால் அதுவெல்லாம் பொது முடக்கத்திற்கு முன்பு. அவர்கள் மட்டுமா இல்லை? அமைப்புசாரா தொழிலாளர்கள் அவ்வளவு பேர் வருவார்கள். அவர்கள் யாரும் ரயிலில் கால்வைக்க முடியாது. அவர்கள் ஆட்டோவில் செல்ல கூடும். 

இந்த ஏழு மாதகாலத்தில் கொரோனாவை விட அதிகமாக விலைவாசி உயர்ந்து இருக்கிறது. வேப்பம்பட்டில் இருந்து ஆவடி செல்ல ஆட்டோவில் நபர் ஒன்றுக்கு 50 ரூபாய். பேருந்து இயக்கப்படாத காலத்தில் இது இன்னும் அதிகம். ஆவடியில் இருந்து இன்னும் உள்ளே செல்ல தனி ஆட்டோக்கள் தனி கட்டணம். எச்.வி.எப் இல் வேலை செய்பவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 250 ரூபாய் செலவழித்து சென்று வருகிறார்கள். 

இதற்கு யாரை குற்றம் சொல்லுவது? சவாரிகள் குறைந்துவிட்டதால் விலை ஏற்றிய ஆட்டோகாரர்களையா? அல்லது பேருந்தை இயக்காமல் பணிக்கு செல்ல அனுமதித்த அரசையா? கொரோனா என்ற கொடிய நோயால் அதிக பாதிப்படைந்தது சாமானியர்கள் மட்டும்தான். கொரோனா தொற்று இல்லாத பல சாமானியர்களின் பெயர்கள் அரசின் கணக்கெடுப்பில் உள்ளது. இது இன்று நாடறிந்த உண்மை. 

உலகம் முழுவதும் பெரியம்மை என்ற ஒரு நோய் இருந்தது. அதனால் உயிரிழந்தவர்கள் அதிகம். பிழைத்தவர்களுள் கண்ணிழந்தோர் பேச்சிழந்தோர் ஏராளம். அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சில நூறு ஆண்டுகள் ஆனது என்பது அனைவரும் அறிந்ததே. கொரோனாவும் அது போன்று தான். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பல பாதிப்புகளை சந்திப்பதாக சொல்கிறார்கள். தடுப்பு மருந்து இதோ வருகிறது அதோ வருகிறது என்று ஏழு மாதம் முடிந்து விட்டது. இதிலிருந்து நாம் தெரிந்து கொண்டது என்ன? தடுப்பு மருந்தை எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் உண்மை. 

உண்மையான அறிவியல், உண்மையான ஆராய்ச்சி, நோய் தன்மையின் உண்மை நிலை என்று உண்மை இங்கு விற்பனைக்கு ஒவ்வாத சரக்கு ஆகிவிட்டது. கையறு நிலையில் இருக்கும் சாமானியனின் உண்மை பிழைத்து இருத்தல்.

ஆனால் இந்த பதிவு கொரானாவை பற்றியோ அல்லது அதை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை பற்றியதோ அல்ல  என்பதால் மீண்டும் எனது தொடர் நண்பனான ரயில்களுக்கு திரும்பி விடலாம் (எழுத்து என்பதே வன்முறைதான் அதைப் பற்றி வேறொரு சமயம் பேசலாம்).  தளர்வுகள் உடன் கூடிய பொது முடக்கத்தில் ரயில்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தமாக இயக்கப்படுகிறது. வரவேற்கத்தக்க செயல் தான். 

நான் முன்பு சொன்ன பயண சீட்டு நினைவிருக்கிறதா? இப்போது ஒரு மாத கால பருவ உ ழல் சீட்டு பெற்றுள்ளேன். அதை வாங்கும்போதே மனதில் ஒரு கேள்வி எழுந்தது. இவ்வளவு நாட்களுக்கு பிறகு ரயிலில் ஏறும் பொழுது என்ன மாதிரியான உணர்வுகள் தோன்றும்? கதாநாயகியை காணும் கதாநாயகன் தொண்டைக்குழி வற்றி பேச்சற்று தடுமாறுவானே அதுபோல் இருக்குமோ என்று கூட தோன்றியது. அந்தக் கற்பனை சற்றே மிகைப்படுத்தப்பட்டு இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு வித்தியாசத்தை உணர்வேன் என்று நம்பினேன். 

"இல்ல நிச்சயமா இல்ல" என்ற பல் குச்சி விளம்பரம் போல எந்த ஒரு வித்தியாசத்தையும் உணராமல் எப்போதும் போலதான் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். நட்பு என்பது இதுதான். இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டிருந்தாலும் அதை நினைவு படுத்தாமல் இருப்பது. நான் தினமும் பார்த்து பழகிய பூக்கார அக்கா, வளையல்கள் விற்கும் அக்கா, சமோசா விற்பவர் ஆப்பிள்கள் விற்பவர், ரயிலை மட்டுமே நம்பியிருக்கும் நரிகுறவர் இளைஞர்கள் என அனைவரும் சேர்ந்து பயணிக்கும் காலம் விரைவில் வரும். அவர்களும் என்னைப் போலவே நட்பின் வாஞ்சையோடு எந்த ஒரு வித்தியாசத்தையும் உணராமல் வண்டியில் ஏறுவார்களா அல்லது இழந்த அனைத்தையும் சமன் செய்யும் பாரத்துடன் ஒலிக்க துவங்குவார்களா?