காலையில் கல்லூரி தோழி ஒருவர் என்ன சங்கதி (அதாங்க வாட்ஸ்அப்) யில் குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியிருந்தார்; நான் ரயில் பற்றி எழுதிய ஒரு நிகழ்வின் சுட்டி வேண்டி. அது ரயில்களை பற்றிய நினைவுகளை கிளறிவிட்டது. ரயிலில் கால்வைத்து இன்றோடு 33 நாட்கள் ஆகிறது. ரயிலின் ஓசை கேட்பதும் நின்றுவிட்டது. சென்ற வாரம் மளிகை வாங்க சென்றபோது சரக்கு ரயில் ஒன்றை பார்த்தேன் அவ்வளவுதான். தண்டவாளங்கள் ஓய்வெடுக்கும் போலும்.
எங்கள் ஊருக்கு எப்போது ரயில் நிலையம் வந்தது என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் ரயில் நிலையம் வந்த பிறகுதான் எங்கள் ஊருக்கு ஆங்கில பள்ளியும் வந்தது. அந்த பள்ளியில் தான் அப்பா என்னையும் ஓரிரு ஆண்டுகள் கழித்து எனது தங்கையையும் சேர்த்தார். ரயில் நிலையம் கடந்துதான் அந்த பள்ளிக்கு செல்ல வேண்டும். காலை மாலை இருவேளையும் எங்களை சைக்கிளில் அமர்த்தி பள்ளிக்கு கொண்டு சென்று வருவது பெரியப்பாவின் விருப்ப வேலை.
ரயில் நிலையம் வந்தபோதுதான் எங்கள் ஊரில் ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியும் தொடங்கப்பட்டது என்றே நினைக்கிறேன். எங்கள் தெருவில் இறங்கி நடந்தால் நேராக கல்லூரியில் முகப்பில் நிற்கலாம். அதனால் மாணவர்களின் விருப்ப வழித்தடமாக எங்கள் தெரு அமைந்திருந்தது. அப்போதெல்லாம் எங்கள் தெருவில் நிறைய புளிய மரங்கள் இருக்கும். தெருவில் நடந்து செல்லும் மாணவர்களின் மிகப்பெரிய சந்தேகம் இந்த ஊருக்கு ஏன் வேப்பம்பட்டு என்று பெயர் வைத்தார்கள் என்பதுதான். அவர்களின் கருத்துப்படி புளிய மரங்கள் நிறைய இருப்பதால் புளியம்பட்டி என்று பெயர் வைத்திருக்க வேண்டுமாம். ஆனால் அவர்கள் நடந்து சென்ற தெரு பெருமாள்பட்டு கிராமத்தில் உள்ளது என்பது அவர்களுக்கு தேவையற்ற ஒரு தகவல். ஏனெனில் ரயில் நிலையங்கள் ஊர்களை ஒன்றிணைந்து ஒரு புதிய அடையாளத்தை தந்துவிடுகின்றன. இன்றும் எங்கள் ஊரின் பெயர் பெருமாள்பட்டு தான். ஆனால் நானே கூட அதை அதிகம் உபயோகப்படுத்துவதில்லை. ஒருவேளை பிலிப்கார்ட் அமேசான் டெலிவரி பையன்களுக்கு தெரிந்திருக்கும். வீட்டு முகவரியில் இன்றும் பெருமாள்பட்டு தான்.
எனது சித்தப்பாக்களும் அத்தைகளும் அண்ணன்களும் அண்ணிக்களும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்கு சென்றார்கள். அதனால்தான் என்னவோ தோல்வியுற காத்திருந்தது போல ஒரு வகுப்பில் தேர்ச்சி பெறத் தவறினால் வீட்டிலேயே தங்கி கொண்டார்கள். 12 வரை சோரம் போகாமல் முடித்திருந்த அத்தைக்கு திருமணம் செய்விக்கப்பட்டது. 12 முடித்த ஒரு சித்தப்பா மட்டும் சென்னை அம்பேத்கர் கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தார். அதுவும் ரயில் நிலையம் வந்த பிறகுதான்.
ஆனால் அப்பா மட்டும் ரயில் நிலையம் வருவதற்கு முன்பிருந்தே ஆவடியில் பணிபுரிந்து வந்தார். பக்கத்து ஊரான திருநின்றவூர் வரை சைக்கிளில் சென்று அங்கிருந்து ரயில் பிடித்து ஆவடி செல்வார்.
திருநின்றவூரில் டாடா குழுமத்தின் எஃகு உருட்டு ஆலை ஒன்று இருந்தது. ஆலைக்கு உள்ளிருந்து தண்டவாளம் ஒன்று வெளியே பிற தண்டவாளங்கள் உடன் இணையும். சரக்கு ரயில்கள் ஆலையின் உள்ளே செல்வதை நான் ஒருபோதும் பார்த்தது கிடையாது. ஆலை பாழடைந்து கிடக்கும். ஆனால் பெரியப்பா ஒரு காலத்தில் அந்த ஆலையில் இரண்டு ரூபாய் கூலிக்கு வேலை பார்த்ததாக சொல்லுவார். பத்தாண்டுகளுக்கு முன்பு ஆலை புதுப்பிக்கப்பட்டு இயங்கத் தொடங்கியது. இப்போதெல்லாம் உருளையாக சுத்தப் பட்ட எஃகு தகடுகள் பெரிய பெரிய லாரிகளில் தான் எடுத்து செல்லப்படுகிறது.
உள்ளூரில் படித்த காலத்தில், வீடு திரும்பும் போது தவறாமல் செய்தது சரக்கு ரயில்களின் பெட்டிகளை எண்ணியது. மிக அதிகமாக 92 பெட்டிகள் வரை எண்ணியிருக்கிறேன். அவ்வளவு பெரிய ரயில் இருக்குமா என்று இப்போது சந்தேகமாக உள்ளது. ஆவடியில் படிக்கும் போது பல நாட்கள் பீரங்கிகள் ஏற்றிய கூரையில்லாத ரயில்கள் நிற்கும். அவற்றை பார்க்கும் போது எப்போதும் ஒரு பெருமிதம். அப்பா கனரக தொழிற்சாலையில் (HVF) வேலை பார்த்தார். எனக்குதான் அந்த வண்டிகளைப் பற்றி எல்லாம் தெரியும் என்ற மிதப்பு.
உண்மையில் அவை பழுது பார்க்க தொழிற்சாலைக்கு வரும் வண்டிகள் என்பது அப்போது தெரியாது. அதோடு அப்பா தொழிற்சாலையில் தொலைபேசி இனைப்பாளர். அவரது அலுவலக பிரிவு தொழிற்சாலையின் நுழைவாயிலுக்கு வெளியே நின்று போனது என்பதும் அப்போது தெரியாது. 11 வயதில் நானே ரயில் ஏறி பள்ளிக்கு சென்றதில் ஒரு நிறைவு.
ரயில்கள் வந்த போது தான் வீட்டு வசதி வாரியம் எங்கள் ஊருக்கு வந்தது. ரயிலில் என்னோடு புதிய மனிதர்கள் பலர் பயணித்தனர். நாங்கள் பிழைப்பு நடத்த சென்னை நோக்கி சென்றோம். அவர்கள் உண்டு உறங்கி சொந்தம் என்று உரிமை கொண்டாட ஒரு மனை வேண்டும் என்று சென்னையிலிருந்து வந்தார்கள். ரயில்கள் இப்படி தான் பல புதுமைகள் நிகழ்த்தியது.
ரயில்கள் என் வாழ்வோடு பின்னிப் பிணைந்து 27 ஆண்டுகள் ஆகிவிட்டன. அன்று சென்னை நோக்கி ரயில்பிடித்த கால்கள் இன்று எதிர் மார்கத்தில் ரயிலுக்காக காத்திருக்கின்றன. இந்த கொரோனா காலத்து முழுஅடைப்பில் நம்மை வீட்டிற்கு உள்ளே வைத்திருப்பதும் ரயில்கள் தான். யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்களே அது போல. ரயில்கள் இல்லாததால் நாமும் வீட்டிற்குள் இருந்து கொள்கிறோம். அவை வெளியே வரும் போது நாமும் வெளியே வருவோம்.