மனிதர்கள் இரண்டு சந்தர்ப்பங்களில் பிரதானமாக பேச்சிழந்து போகிறார்கள். ஒன்று சிந்தனை செயல் இழந்து போகும் பொழுது மற்றொன்று சமூகம் அவர்களது சிந்தனைக்கு கட்டுக்கள் இட்டு இருக்கும்போது. இந்த இரண்டு சூழ்நிலைகளிலும் பாதிப்பு பேசாமல் இருப்பவர்களுக்கே. மனிதர்களை அவர்களது செயல்கள் நிர்மாணிக்கும் அளவிற்கு சொற்களும் நிர்மாணிக்கிறது. இதைத்தான் கவிஞர் யுகபாரதி “சொல்லுறதில் பாதி இன்பம் சொன்ன பின்னே ஏது துன்பம்” என்றார் கும்கி படத்திற்காக.
சொல்லுறதில் உள்ள இன்பத்தையும் சொல்லி விட்டால் துன்பம் இல்லை என்பதையும் உணராத கதை மாந்தர்கள் படும்பாட்டை தான் அண்ணா “சொல்லாதது” என்று நமக்கு படைத்து அளிக்கிறார்.
கதை சுருக்கம்:
பேரழகியான சுந்தரி ஆப்பம் சுட்டு விற்கும் தனபாக்கியத்தின் ஒரே மகள். கணவன் திருவேங்கடம் குடும்ப பற்றுதல் இன்றி தேசாந்திரம் சென்றுவிட அவளது வயிற்றுப் பிழைப்பிற்காக ஆப்பம் விற்பனை செய்கிறாள் தனபாக்கியம்.
அதே ஊரில் இருக்கும் பெரும் பணக்காரரான லோகு முதலியின் மகனான கனகசபேசன் சுந்தரியின் மேல் காதல் கொள்கிறான். சமூக கட்டுப்பாடுகள் எதையும் சட்டை செய்யாமல் இவர்களது காதல் வளர்கிறது. ஆனால் தன் குடும்ப சொத்துக்களை காப்பாற்ற கனகன் இலுப்பைபட்டி மிராசுதாரரின் மகளான காவேரியை மணந்து கொள்கிறான்.
கனகனுக்கு மணம் ஆகிவிட்ட நிலையில் தான் கருவுற்றிருப்பதை அவனுக்கு சொல்லாமல் மறுத்துவிடுகிறாள் சுந்தரி. அவளின் நிலை உணர்ந்த தாய் தனபாக்கியம் அவளை அழைத்துக்கொண்டு ஆற்றூருக்கு சென்றுவிடுகிறாள். மகளுக்கு தாயே தாலி கட்டிவிட்டு கணவன் கடல் தாண்டி வேலைக்கு சென்று இருப்பதாக ஊரில் சொல்கிறாள். சுந்தரிக்கு அழகான ஆண் மகவு பிறக்கின்றான்.
குழந்தைக்கு தங்கராசு என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வருகிறார்கள்.
காவேரியை மணந்த கனகு, தன் மாமனார் மிராசுதாரரின் கொடுமைகளில் இருந்து பல ஏழைகளை காப்பாற்றி விடுகிறான். யாருடனோ ஏற்பட்ட வழக்கு ஒன்றில் தன் சொத்துக்கள் முழுவதையும் இழக்கிறார் மிராசுதாரர். மிராசுதாரரையும் சேர்த்து காப்பாற்ற வேண்டிய நிலைக்கு வருகிறான் கனகசபேசன். சொத்துக்கள் இழந்த சோகத்தில் மிராசுதாரர் முதலில் காலமாகிரார். அவரைத் தொடர்ந்து லோகு முதலியும் மரணிக்க சற்று இடைவெளி விட்டு காசநோய் கண்டு காவேரியும் இறந்துவிடுகிறாள். மீளாத சோகத்தில் சிக்கிக் கொண்ட கனகசபேசன் வேலை தேடி கடல் கடந்து சென்று விடுகிறான்.
பல ஊர் சுற்றித் திரியும் திருவேங்கடம், மனிதர்களை புரிந்து கொள்ளும் நோக்கில் பல ஊர் பயணம் மேற்கொண்டு இருந்த அருமை நாயகம் பிள்ளை அவர்களுக்கு பசி நேரத்தில் உணவு கொடுக்கிறான். இதனால் திருவேங்கடத்தின் மேல் அன்பு கொண்ட அருமைநாயகம் அவனை தன்னுடனே அழைத்து வந்து ஆற்றூரில் இருக்கும் அவரது வீட்டில் தங்க வைத்துக் கொள்கிறார். திருவேங்கடம் ஆற்றூரில் தனபாக்கியத்தை சந்தித்து அவர்களுக்கு நிகழ்ந்துள்ள பெரும் சோகத்தை அறிந்து வருந்துகிறான். அருமைநாயத்தின் உத்தரவினால் அவரது வீட்டிலேயே ஒன்றாக ஒரு குடும்பமாக வாழ்கிறார்கள். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரும் தங்கராஜனை கண்டு சுந்தரி தொலைத்துவிட்ட தனது வாழ்க்கையை எண்ணி வருத்தமடைகிறாள்.
கடல் தாண்டி வேலைக்கு சென்ற கனகசபேசன் கொடுமைக்கார முதலாளியிடம் இருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்று தாய் நாடு திரும்புகிறான். திரும்பியவன் அருமை நாயகத்தின் தொழிற்சாலையில் பணியிடம் இருப்பதாக கேள்விப்பட்டு ஆற்றூருக்கு வருகிறான். அருமை நாயகத்தை சந்தித்து தன் கதை முழுவதையும் கூறி வேலை கேட்கிறான். அவன் யார் என்று உணர்ந்து கொண்ட அருமைநாயகம் சுந்தரியுடன் அவனை சேர்த்து வைக்கிறார். சுந்தரி கனகசபேசன் தன்னை ஏமாற்றியதை தன் மகன் தங்கராசுவுக்கு சொல்லிவிடுவதாக செல்லமாக கனகசபேசனை மிரட்டுவதும், அவன் அவளை கெஞ்சுவதும் கொஞ்சுவதுமாக கதை முற்றுப்பெறுகிறது.
முன் சொன்ன சொற்கள் பற்றிய எண்ண ஓட்டம்:
கதையின் முக்கிய மாந்தர்கள் அனைவரும் அவர்கள் பேசியிருக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் ஏதோ ஒரு அனுமானத்தின் அடிப்படையில் பேசாமல் இருந்துவிடுகிறார்கள். தனபாக்கியம் பேரழகியான தனது மகள் சுந்தரிக்கு அவர்களது வறுமை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் சமூக அந்தஸ்த்தினை எடுத்து கூறாமல் வளர்க்கிறாள். சுந்தரிக்கு அது தெரிந்திருக்கும் என்ற அனுமானத்தில்.
சுந்தரியின் மனதில் ஏற்பட்டிருக்கும் சஞ்சலங்களை உணர்ந்தும் கூட தாய் மகளுக்கு பிரச்சனைகளின்றி பிழைத்துக் கொள்ளும் வழியினை சொல்லாமல் போகிறாள்.
சுந்தரியின் அழகை பெரிதும் ரசிக்கும் லோகு முதலி அவர்களது பொருளாதார நிலை அவளை தன் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கும் என்பதை தன் குடும்பத்தாருடன் கூட பேசாமல் இருந்து விடுகிறார். அவரது அனுமானம் இது அனைவரும் அறிந்ததே என்பது.
லோகு முதலியின் மகன் கனகசபேசன் சுந்தரியின் ஆப்பக்கடை தேடி அடிக்கடி செல்வது தெரிந்திருந்தும் அவனை எச்சரிக்காமல் மௌனம் காக்கிறார். தந்தை மகனிடம் அவனது காமம் சார்ந்த அந்தரங்கம் பற்றி பேசுவது கூடாது என்ற சமூக கட்டுப்பாடு.
கனகசபேசனும் தான் சுந்தரியின் மேல் கொண்டுள்ள காதல் பற்றியும் அவளை மணந்து கொள்ள விரும்புவது பற்றியும் தந்தையிடம் பேசாமல் தவிர்த்து விடுகிறான். இதற்குக் காரணமும் முன் சொன்ன அதே சமூகக் கட்டுப்பாடு.
சுந்தரி கருவுற்றிருப்பது தெரிந்த பின்பும் நியாயம் கேட்க கூட துணிவில்லாமல் எளியவர்கள் பணம் படைத்தவர்களை கேள்விகள் கேட்க முடியாது என்ற வரையறையை ஏற்றுக்கொண்டு வாய் திறக்காமல் ஊரை விட்டு அழைத்துச் சென்று விடுகிறாள் தாய் தனபாக்கியம்.
இப்படியாக அவர்களது அனுமானங்களும் சமூக கட்டுப்பாடுகளும் அவர்கள் வாய்களுக்கு பூட்டுக்கள் போட்டுவிட சுந்தரி மற்றும் கனகசபேசனின் வாழ்க்கை தடுமாறி சென்று விடுகிறது.
அண்ணா தனது எழுத்துக்களை பிரச்சாரமாக பயன்படுத்தினார் என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இருப்பினும் அவரது சிறுகதைகளை கூர்ந்து கவனித்தால் அதில் கட்சியை தாண்டிய ஒரு முற்போக்கு வாதம் இருப்பதை நாம் கவனிக்க முடியும். அவரது மிகப் பிரபலமான செவ்வாழை சிறுகதையில் ஜமீன்தார் முறை எவ்வாறு ஏழைகளை ஒடுக்கியது என்று விளக்கி இருப்பார். சொல்லாதது சிறுகதையிலும் இந்த வர்க்க பேதம் தான் விவாதப் பொருள். அனைத்து தகுதிகள் இருந்தும் ஏழை என்ற காரணத்தினால் மரியாதைக்குரிய வாழ்க்கை கிடைக்காமல் போகிறது சுந்தரிக்கு. கனகசபேசன் பணத்தைப் பெரிதாக என்னும் வரை மனதுக்கு ஒவ்வாத ஒரு வாழ்க்கையையே வாழ்கிறான். பணத்தை துறந்துவிட்டு வரும்போதுதான் மனநிறைவான வாழ்க்கை அவனுக்கு கிடைக்கிறது. அதேசமயம் தன் பணத்தால் அடுத்தவரை ஒடுக்க நினைக்காத அருமைநாயகம் துன்புற்றோருக்கு ஆறுதல் அளிப்பவராக திகழ்கிறார்.
அதேசமயம் சொல்ல வேண்டியதன் அரசியல் பற்றி வெளிப்படையாக இந்த சிறுகதை பேசவில்லை. அதாவது ஏழை எளியவரின் விளிம்புநிலை மக்களின் அடிமைப்படுத்த பட்டோரின் உரிமைகோர வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இந்த சிறுகதை பேசவில்லை. மாறாக சமுதாயத்தில் பெண்கள் அனுபவிக்கும் இழிநிலையை எடுத்துக்காட்டுகிறது. கதையின் முடிவு ஆணின் அன்பை பெற்றால் மட்டும் போதும், கணவனின் கௌரவத்தை காப்பாற்ற வேண்டியது மனைவியின் கடமை என்ற கருத்துக்களை உணர்த்துவதாகவே இருக்கிறது.
சமுதாயத்தில் பெண்களின் இழிநிலை அவர்களை புறக்கணித்தல் போன்ற சமுதாய கேடுகளைப் பற்றி பல இடங்களில் பதிவு செய்துள்ள அண்ணாதுரை அவர்கள் இந்த சிறுகதையை முடித்த விதம் பெண்களுக்கு அதிகாரம் வழங்குதல், தற்சார்புடன் வாழுதல் போன்ற கருத்துக்களை சிந்திக்க வில்லை என்றே காட்டுகிறது.
எனினும் ஒரு சிறுகதையை வைத்து ஒரு எழுத்தாளரின் அரசியலை தீர்மானிப்பது அவரை குறுக்கும் நோக்குடையது என்ற காரணத்தினால் அறிஞர் அண்ணா பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும் என்று மட்டும் விரும்பினாரா அல்லது அவர்களுக்கு அதிகாரமும் தற்சார்பும் கிடைக்க வேண்டும் என்றும் விரும்பினாரா என்பதை வாசகர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.
அண்ணா என்றால் அடுக்குமொழி என்பது கதை முழுவதும் கொட்டிக் கிடக்கிறது. கதை இப்படி துவங்குகிறது: “அவளுக்கு சுந்தரி என்ற பெயர் காரணப் பெயராகவே அமைந்தது என்று எந்த இலக்கண பண்டிதரும் சொல்லவில்லை. சொல்வானேன்? மலரை எடுத்து வைத்துக் கொண்டு ஆகா! என்ன மனம், எவ்வளவு இன்பம் என்று சொல்லாமலே, எவ்வளவு பேர் முகர்ந்து ரசிக்கவில்லையா?”
லோகு முதலி சுந்தரியை பார்க்கும்பொழுது பின்வருமாறு மனதில் எண்ணிக் கொள்கிறார். “அழகான பெண், அடக்கமானவள், ஏதோ கொஞ்சம் படித்தும் இருக்கிறாள். ஏழைதான், இருந்தால் என்ன? நம் வீட்டில் உலாவினாளே போதும் கிருகலட்சுமியாக இருப்பாள். நம் பையனுக்கு ஏற்ற பொருத்தமான பெண். என்ன செய்வது? அவள் ஆப்பகாரிக்கா பிறக்க வேண்டும்? அரச மரத்தை ஆறு வருஷம் சுத்தியும் பயனில்லாமல் அடுத்த தெருவில் அழுது கொண்டிருக்கிறாளே தாசில்தாரின் சம்சாரம் தில்லை, அவள் வயிற்றில் பிறந்திருக்க கூடாதா? நம் மகனுக்கு கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே” என்று லோகு முதலி சொல்லவில்லை. மனதிலே இதுபோல் பலமுறை அவர் நினைத்தார்; சொல்லவில்லை வெளியே. லோகு முதலி பணம் படைத்தவர், பெண் இழந்தவர். ஒரே மகன் அவருக்கு. ஒய்யாரமான பையன். சுந்தரியிடம் மையல் அவனுக்கு.”
தனக்கு ஒரு குழந்தை இல்லை என்ற வருத்தத்தை அனுபவிக்கும் கனகசபேசனின் மன ஓட்டமாக அண்ணா இவ்வாறு குறிப்பிடுகிறார்.
"என் மகன் ராஜகோபால் இருக்கிறான். எனக்கென்ன கவலை!" என்று கனகு யாரிடம் கூறுவான்? எப்படிக் கூறுவான்? விஷயமே அவனுக்குத் தெரியாது? தெரிந்தாலும் கூறமுடியுமா?
"உனக்கு இவ்வளவோடா நின்றுவிடும் கேடு? நீ படவேண்டியது எவ்வளவோ இருக்கிறது; உன்னுடையப் பணத்திமிரினால், எவ்வளவு ஏழைகளை கண் கலங்கச் செய்திருக்கிறாய்? அதனுடைய பலனை அடைகிறாய். என் மீது கோபித்துக் கொள்கிறாயே. உன் அட்டகாசத்தால் ஊரிலே உனக்குப் பகை. வியாஜ்யம் பிறந்ததும் உன் விரோதிகள் உன்னைத் தீர்த்துக் கட்ட வேலை செய்கிறார்கள். படு, எனக்கென்ன! நான் என்ன செய்வது? உன்னாலே நான் கெட்டேன். என்னாலே அந்தப் பெண் கெட்டுச் சீரழிந்து, எங்கோ போய்விட்டாள். உன் முகத்தைப் பார்க்கும்போதே எனக்கு வருகிற கோபம் கோடாரியையோ, அரிவாளையோ தேடச் செய்கிறது."
இப்படியாக வார்த்தைகளை நயம்பட அடுக்கிக் வாசகருக்கு அலுப்புத்தட்டாமல் பார்த்துக் கொள்கிறார். கதை ஆண் காதலித்த பெண்ணை ஏமாற்றுதல் என்ற உளுத்துப்போன கருவை கொண்டிருந்தாலும் அண்ணாதுரை கையாண்டிருக்கும் சொற்பின்வருநிலை என்னும் அணி இலக்கண உத்தி கதையை சுவாரசியம் மிகுந்ததாக மாற்றுகிறது. அதாவது, சொல்லவில்லை என்ற வார்த்தை கதை முழுவதும் மீண்டும் மீண்டும் ஒரே அர்த்தத்துடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சொல்லவில்லை என்ற சொல்லுக்கு வேறு அர்த்தங்கள் இல்லை ஆயினும் அது ஒவ்வொரு முறை பயன்படுத்தப்படும் போதும் அதன் கனம் கூடிக்கொண்டே போகிறது. சுந்தரியின் அழகை பற்றி அவரது ஆசிரியர், ஊர் மக்கள், எவரும் வாய்திறந்து சொல்லாத போது ஏற்படுத்தாத பாரம், பதற்றம் சுந்தரி கனகு தன்னிடம் அதிக அக்கறை எடுத்துக்கொள்வது பற்றி தன் தாயிடம் சொல்லவில்லை என்று ஆசிரியர் சொல்லும் போது நம்மை அழுத்துகிறது. அதேபோல சுந்தரி கருவுற்றிருப்பதை தாயிடம் சொல்லாமல் மறைக்கும் போதும் நெஞ்சு பதறுகிறது. அப்படியே ஒவ்வொரு விடுபடுதலின் போதும் வாசகர்கள் வருத்தமும் கோபமும் பதற்றமும் கொள்ள நேரிடுகிறது. இறுதியாக கனகு தன்னை ஏமாற்றியதை சுந்தரி தன் மகனிடம் மறைக்கும் போது ஆசிரியர் “எப்படி சொல்ல முடியும்” என்று சொல்லி கதையை முடிக்கிறார். அந்த ஒரு பதில் உணர்ந்த வாக்கியம் பல கேள்விகளை நம் முன் நிறுத்திவிடுகிறது. அதில் மிக முக்கியமானது சுந்தரியை சொல்லவிடாமல் தடுப்பது எது என்ற கேள்விதான்.
மீண்டும் ஒருமுறை அந்த கேள்வி உங்கள் முன்னால்.
3/2/2019 அன்று வாசகசாலை தமிழ் சிறுகதை கொண்டாட்டம் நிகழ்வு 97 இல் பேசியது.
No comments:
Post a Comment