நீல நிறம் பல முக்கியமான விஷயங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளது. கடலின் நிறம் நீலம். வானத்தின் நிறம் நீலம். இந்து சமயத்தில் நீளத்திற்கு என்று ஒரு தனி கதை உண்டு. சிவன் நீலகண்டன் ஆவான். கொடிய விஷம் என்று கருதப்படும் ஆலகால விஷம் நீலநிறமுடையது என்றே புராணங்கள் சொல்லுகின்றது. இந்தியா வரலாற்றில் நீல நிறம் தலித் எழுச்சி குறிக்கும் நிறமாக உள்ளது. ஐரோப்பிய பண்பாட்டிலோ நீல நிறம் அரச குடும்பத்தை குறிப்பதாக இருக்கிறது. அரச குடும்பத்தை சேர்ந்தவர்களை ப்ளூ பிளட் என்றே அழைக்கிறார்கள். நீல நிறம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. தொழில் புரட்சிக்கு முந்தைய காலங்களில் நீல நிறத்திலான துணி வகைகள் அதிகப்படியான விலைக்கு விற்கப்பட்டதாக என்று ஒரு செய்தியும் கேட்க கிடைக்கிறது. இப்படி நீல நிறம் அதிகம் காண கிடைக்கும் நிறமாகவும் அதேசமயம் தனித்துவம் வாய்ந்த நிறமாகவும் இருக்க ஆசிரியர் தன் சிறுகதைத் தொகுப்பிற்கு நீலம் பூக்கும் திருமடம் என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தொகுப்பில் வரும் நீலநிறம் ஐரோப்பிய மரபின் சிறப்புகளை பெற்றுள்ளதா அல்லது இந்து சமய அதிர்வலைகளை கொண்டுள்ளதா என்று சற்றே உள் சென்று பார்க்கலாம்.
தொகுப்பின் தலைப்பிட்ட சிறுகதையின் நாயகி நீலா கணவனை இழந்து குழந்தையும் இறந்து தனித்து வாழும் பெண். அவளது சொந்த வீட்டிலேயே அன்னியர்களால் கொல்லப்படுகிறாள். அவளது கணவன் அதற்கு முன்பு அதே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். அவர்களது சின்னஞ்சிறு பெண் குழந்தை அந்த வீட்டில் பிறந்து ஓரிரு மாதங்களிலேயே இறந்துவிடுகிறது. நீலாவின் கணவனுக்கு இந்த உலகுடன் இருக்கும் பந்தம் நீல நிறத்திலும் நீலம் என்ற பெயராலும் மட்டுமே நிலைக்கிறது. அவன் தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் நீளத்தை முன்னிறுத்தி அல்லது அதில் மூழ்கி விடும் எண்ணத்துடனே மேற்கொள்கிறான். நீல நிறத்தை பார்க்கும் போது அந்த நிறம் அவனைப் போலவே தனித்துவம் வாய்ந்ததாக மிளிர்கிறது. அதேசமயம் அவனது மரணத்தை நிர்ணயிக்கும் ஒரு பொருளாகவும் நிறம் உரு பெற்றுவிடுகிறது. தன் தாயே தனக்கு மகளாக பிறந்து விட்டதாக எண்ணி களிப்புற்ற அவன் குழந்தை இறந்து விட தனக்கும் நீலத்திற்கும் இருந்த பந்தம் அழிந்துவிட்டதாக எண்ணியே தற்கொலை செய்து கொள்கிறான். அவனுக்குப் பிறகு அவன் மிகவும் ரசித்து வாங்கிய அந்த நிலம் மற்றும் அந்த வீடு அவனால் பெயர் சூட்டப்பட்ட நீலாவை கொள்ளும் கொலைக்கருவி ஆகிறது. இந்த கதையின் படி நீல நிறம் நஞ்சு என்ற ரீதியிலேயே முன்வைக்கப்ப்பட்டுள்ளது எனலாம்.
ஆனால் நீலம் என்ற வார்த்தையோ அல்லது நிறமோ வேறு எந்த கதையிலும் இடம்பெறவில்லை. நீலம் பூத்த திருமடம் நிலாவிற்கு தனிமையும் மரணத்தையும் தான் அளிக்கிறது. இந்த சட்டகத்தை கொண்டு பிற கதைகளில் நோக்குவோமேயானால் நீலம் மரணமாக மிளிர்வதைக் காணலாம். காந்தாரி தனது உயிரை இழக்கவில்லை எனினும் தானே முன் வந்து தன் பார்வையை இழந்துவிடுகிறாள். நீ நான் கதையில் வரும் பெயரற்ற நாயகி அவளது சுதந்திரத்தை இழந்துவிடுகிறாள். குரு பீடத்தின் சிவகாமி இறந்துவிட்ட தனது நம்பிக்கையை திரும்பப் பெறும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறாரள். கிடப்பில் கிடத்தப்பட்டிருக்கும் நாகம்மாள் சொந்தங்களுக்கு அலுப்பு ஊட்டிய நிலையில், திருடனின் கைகளால் கருணையினை பெற்று ஏகாந்தத்தில் மரணிக்கிறாள். பதின்பருவத்தில் காதல், மகிழ்ச்சியை கொண்டு வருவதற்கு பதிலாக காந்திமதிக்கு மன உளைச்சலை தருகிறது. வாடிக்கை மறந்ததும் ஏனோ…. நாயகியை இந்த சட்டகத்தினுள் கொண்டு வர நான் விரும்பவில்லை. அதன் காரணங்களை பின்னர் காணலாம்.
ஆக நீலம் என்பது தனித்துவமிக்கதாக இருக்கும் அதே நேரத்தில் அது நேர்மறையான பொருளுள்ளதாக கருத முடியவில்லை.
இந்த நாயகிகளுக்குள் நஞ்சை தவிர்த்த வேறு ஒரு ஒற்றுமை உண்டு. அது அவர்களின் தன்னிலைகள். இவர்களை நாம் இரு குழுக்களாக பிரிக்கலாம். காந்தாரி, நான் நீ நாயகி, நாகம்மா மற்றும் சிவகாமி ஆகிய நால்வரும் எதார்த்தத்தில் தங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியினை உணர்ந்த தன்னிலைகள். ஏனைய மூவரும் - நீலா, மதி, மற்றும் காந்திமதி - எதார்த்தத்துடன் ஓடிக் கொண்டிருப்பவர்கள். முதல் நால்வரும் தங்களின் விருப்பு வெறுப்பை மீறி தங்களின் வாழ்க்கையை பிறர் கட்டுப்படுத்துவதை நன்கு உணர்ந்தவர்கள். தங்களால் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாமல் சிக்குண்டு தவிப்பவர்கள்.
இரண்டாம் குழுவினர் தங்களின் தன்நிலைகளை உணராது இருப்பவர்கள். காந்திமதி காதலித்தால் தனக்கு இக்கட்டுகள் நேருமென்று அதனை தவிர்த்து விட்டு தப்பிக்க நினைப்பவள். நீலா காதலுக்காக தனது பெயரையும் கூட விட்டுக்கொடுத்தவள். காதலன் பிரிந்தபோதும் கூட தன்னுடைய இருப்பினை இறந்துவிட்ட தனது குழந்தை மற்றும் கணவன் விட்டு சென்ற வீடு என சுருக்கிக் கொண்டவள். மதியோ தனது வாழ்வினை தனது தந்தையின் நினைவுகளிலிருந்து பிரித்து பார்க்காதவள். இப்படியாக இந்த இரண்டு குழுக்களின் தன்நிலைகளும் தான் கதையினை நகர்த்திச் செல்கிறது. காந்தாரியின் முடிவைப் பற்றி திருதராஷ்டிரன் எந்தவித ஆர்வமும் காட்டாமல் இருப்பதுதான் அவளை தன் கண்களைத் திறந்து உலகத்தைப் பார்க்க உந்துகிறது. பெண்கள் பெற்றோருக்கும் புகுந்த வீட்டாருக்கும் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற விதிதான் நீ நான் கதையின் பெயரில்லாத நாயகியை தனக்கு நடக்கும் கொடுமையை கூட பரிகசிக்க வைக்கிறது.
கதாநாயகிகளின் தன்னிலைகள் தான் கதைகளின் அரசியலையும் விளங்குகிறது. The personal is political என்று சொல்வதைப் போல் இந்தப் பெண்கள் இவர்களது வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் பெண் பாலினத்தின் இருப்பினை, அவலத்தினை எடுத்துரைக்கிறது. பெண் ஒரு கருவியாகவே பயன்படுத்தப்படுகிறாள். ஒரு நாட்டின் அரசியல் நட்புகளை தீர்மானிக்க, குடும்ப கௌரவத்தை கட்டிக்காக்க, காதலை வளர்த்தெடுக்க, ஆண் வழி சமூகத்தின் பெருமையினை நிலைநிறுத்த என அவள் தனது தன்நிலையினை சமூக நிறுவனங்களின் தேவைக்கேற்ப அச்சடிக்கிறாள்.
பெண்களின் இருப்பைப் பற்றி பேசும் கதைகளெல்லாம் பல நேரங்களில் அவர்களை பாதிக்கப்பட்டவர்கள் ஆகவே நிறுவுகிறது. ஆனால் தீபா அவர்களோ இந்த கம்பியின் மேல் மிக லாவகமாக நடந்து அவலம் என்னும் சுவையினை பல இடங்களில் தவிர்த்திருக்கிறார். ஒருகட்டத்தில் காந்தாரி சொல்லுகிறாள், “நான் எனது கண்களை கட்டி இராவிட்டால் நீங்கள் அதை பறித்திருப்பீர்கள்” என்று. இருப்பினும் அவள் தனது நிலை குறித்து வருந்துபவள் இல்லை. அவள் சொல்கிறாள்: “ இது தியாகம் அல்ல. இது ஒரு வைராக்கியம். சிறுவயதிலிருந்தே இருட்டை பார்த்து அச்சப்படுபவளாக இருந்திருக்கிறேன். எது நமது பலவீனமோ அதற்குத்தான் சோதனை வரும் என்று நீதானே சொல்லுவாய். அதை நான் எதிர்கொள்ளப் போகிறேன்.” அவளைப் போலவே நாகம்மாவும் இந்த கிடங்கில் என்னை விடுவார்கள் என்று தெரிந்திருந்தால் தான் நன்றாக இருக்கும் பொழுதே இதை சுத்தப்படுத்தி இருப்பேன் என்றே எண்ணுகிறாள். “உங்கள் பேத்தியை பள்ளிக்கூடத்தில் சேர்ந்து விட்டீர்களா” என்று நிதானமாக ஒரு கேள்வியைக் கேட்டு சமூக பாரம் முழுவதையும் மாறன் வாத்தியாரின் தலையின்மேல் வைக்கிறாள் சிவகாமி. காதலால் கட்டிப் போடப்பட்டிருக்கும் நீலா கூட தன் போராட்டம் வெற்றி பெறாமல் தான் உயிர் துறக்கிறாள். இப்படி பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி பேசினாலும் கதை மாந்தர்கள் தன்னிரக்கத்தைத் கொண்டவர்களாக இல்லாமல் இருக்கிறார்கள். இது இக்கதைகளின் மிகப்பெரிய பலம்.
அவலச் சுவைக்கு அதிக வாய்ப்புக்கள் கொண்ட நீலாவின் கதையில் பொருளியல் உலகை மனோதத்துவ உலகுடன் இணைத்து அவளது வாழ்விற்கு பொருள்தருகிறார். “வீட்டினுள் அறிமுகமற்ற சிலரின் நடமாட்டத்தை நீலா உணர்வு கடந்து வெறித்துக் கொண்டிருந்த போது பழகிய அந்த அழுகை சின்னஞ்சிறு அலறலாய் தொடங்கியது. தன்னை தூக்கி கொள்ளுமாறு அவளிடம் இறஞ்சியது. தன்னுடைய மடியில் கிடந்து ஒலித்த குரலை சமாதானம் செய்தே ஆகவேண்டும் என்ற உந்துதல் நீலாவுக்கு எழுந்தது. கட்டிய மார்பு பெருக்கெடுத்தது” என்று நீலாவின் மரணத்தை அவளது மகளுடன் சேர்தலாக நமக்கு அளிக்கிறார். “இவன் என்ன? ஹெலிகாப்டரில் எல்லாம் கூட வருவாங்க அவனுவளையே சமாளிப்போம் வாடி…” என்று ராதாவின் கூற்றாக உற்சாகம் அளிக்கிறார்.
சிறுகதை என்பது மிகக்குறுகிய இடத்தையே விவாதத்திற்கு அளிக்கிறது. இதில் பெண் அரசியல் சாரம் முழுவதையும் எழுதுவதற்கு அதிக நாட்கள் பிடிக்கும். தீபா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் சொல்கிறார் “வழிநடையில் வந்து நின்றால் நலம் விசாரிக்கும் கரிசனத்தோடு சிலர் என்னுடைய கதைக்குள் வந்தார்கள். இன்னும் பலர் சரியான சமயத்தில் வந்துசேர்வார்கள். காத்துக் கொண்டிருக்கிறேன்”. கதைகள் வந்து சேர்ந்ததாக குறிப்பிட்டிருந்தாலும், கதைகளில் தேர்ந்த பெண் அரசியலை பார்க்க முடிகிறது. ஏழு கதைகளிலும் ஏழு விதமான பெண்கள் அவர்கள் சந்திக்கும் வித விதமான பிரச்சனைகள். ஆண்கள் அரிதாகவே வந்து போகிறார்கள். இவற்றிற்கெல்லாம் கிரீடம் வைத்தாற்போல் காந்தாரி சொல்கிறாள்: “ஆண்களுக்கு ஒரே வாய் தான். ஆனால் பேசக்கூடிய நாக்குகள் தான் விதவிதமாய் முளைத்திருக்கின்றன.”
கதைகளின் மொழி:
பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளை கதைக்களமாக கொண்டு எழுதப்பட்டிருக்கும் சிறுகதைகள் என்பதால் அவற்றுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ் இடமோ பேசு மொழியோ தேவை இல்லைதான். இருப்பினும் வட்டார வழக்கு நிரம்பிய ஜான்சிராணியை பின்தொடரும் காதல் எனும் சிறுகதை மிக உயிர்ப்புடன் இருந்தது. அந்த வட்டாரத்திற்குள் இருக்கும்போதுதான் ஆசிரியர் அங்கதத்தை வெளிப்படுத்துகிறார். “இந்த ஊரிலேயே நாமதான் அழகா இருக்கோமாடி” என்று ராதா கேட்கும்பொழுது சிரிக்காதவர்கள் இருந்திருக்க முடியாது.
முன் சொன்ன வாடிக்கை மறந்ததும் ஏனோ…
தொகுப்பில் உள்ள கதைகளுள் தனித்து தெரிவது வாடிக்கை மறந்ததும் ஏனோ கதை. மதி என்னும் பெண் தன் தந்தையின் நினைவுகளுக்குள் மூழ்கி தன்னை கண்டடைகிறாள். இந்த கதையில் ஆசிரியர் இருண்மையை கையாள்கிறார். முதலில் மதியின் வயது பற்றி நமக்கு ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டு பின்னர் அவள் வயது முதிர்ந்தவர் என்று நமக்கு சுட்டிக் காட்டி ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உறவினை நம் கண் முன்னால் கொண்டு வருகிறார். குழந்தைகளுக்கு பெற்றோரின் தேவை மற்றும் அருமை அவர்களது முதிர்ந்த வயதில் தான் புலப்படுகிறது. அதுபோலவே மதியும் தனது முதிர்ந்த வயதில் தான் தன் தந்தையின் மன ஓட்டத்தை நன்றாக புரிந்து கொள்கிறாள். தந்தைக்காக அவள் மனம் கசிகிறது. இந்த கதை தொகுப்பில் தனித்து தெரிவதற்கு இரண்டு காரணங்கள் உள்ளது. தொகுப்பில் அதிகமான நேரம் ஒரு ஆணை மையப்படுத்தி நிகழும் கதை இது ஒன்றுதான். அதுபோலவே ஆண்களை அன்போடு எந்தவித எதிர்மறை எண்ணங்களும் இல்லாமல் நினைவுகூறும் கதையும் இதுதான். மதியின் தன்னிலை ஒடுக்கப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட நிலையாக இல்லாமல் முதுமை என்னும் ஒற்றைப் புள்ளிக்குள் பாலினம் அனைத்தும் அடக்கம் என்று காட்டுகிறது. ஒருவகையில் நாகம்மாவும் நீலாவும் மதியும் ஒத்த வயதினராக இருக்கும் பட்சத்தில் தன் தந்தையின் வயோதிகத்தின் ஊடாக தனது வயோதிகத்தை புரிந்து கொள்ளும் அம்சம் நிச்சயமாக மற்ற இரண்டு கதைகளில் இல்லை. பெண்ணுக்கு ஆண் எதிரி என்ற தட்டையான பார்வையை விடுத்து மறக்கமுடியாத ஒரு தந்தையை கொண்டுள்ளது. தந்தை மகளுக்கு என்ன செய்தார் என்று ஆராயாமல் ஒரு தந்தையின் வசீகரத்தையும், ஒரு குழந்தையின் பரவசத்தையும் படைத்தளிக்கிறது.
இவ்வாறு கதைகள் ஒவ்வொன்றும் அதன் களத்திற்கேற்ப ரசனையோடு நெய்யப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment